
இரத்மலானை, ஞானேந்திர வீதிப் பகுதியில் உள்ள வீட்டிற்கு கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி அடுக்கு மாடிக் வீடு மீது இரண்டு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் ஒன்று வெடித்ததுடன் மற்றொன்று தோட்டப் பகுதியில் கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கல்கிசை பொலிஸ் நிலையம், மொரட்டுவ மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவ மற்றும் இரத்மலானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியொருவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையில் நிலவும் தகராறே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்குண்டுத் தாக்குதலின் காரணமாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரண்டு சாளரங்களின் கண்ணாடிகள் மாத்திரம் வெடித்துச் சேதமடைந்துள்ளன.
கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

