கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையத்தின் பெயரில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
குடிநீர் வணிகம் நடப்பதாகக் காட்டிக்கொண்டு, அதன் பின்னணியில் மதுபான உற்பத்திப் பணிகள் நடைபெற்று வந்தது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சோதனையின் போது சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட தலா 180 மி.லி கொண்ட 18,575 மதுபானப் போத்தல்கள் (மொத்தம் 3,345.5 லீட்டர்), 1 லீட்டர் கொள்ளளவு கொண்ட 4 போத்தல்கள் மற்றும் 750 மி.லி கொண்ட ஒரு போத்தல், மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எத்தனோல் (Ethanol) மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான உபகரணங்கள், 50 கிராம் மற்றும் 200 மில்லி கிராம் கேரளா கஞ்சா போன்ற
பெரும் அளவிலான மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, வேபொட தெற்கு, கெத்தலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சட்டபூர்வமான குடிநீர் வணிகத்தின் பெயரால், இந்தச் சட்டவிரோத மதுபானங்கள் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதா என்பது குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வர்த்தக ரீதியிலான இந்த மோசடி குறித்து மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

