இந்தியாவின் புகழ்பெற்ற மூத்த ஓதுவா மூர்த்தி, திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார், இலங்கைக்கு வருகை தருகிறார். பத்மஸ்ரீ விருதினைப் பெற்ற முதல் ஓதுவார் என்ற பெருமைக்குரிய இவர், தற்போது தருமையாதீனத் தேவாரப் பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 81 வயதிலும் தளராது தமிழகமெங்கும் பயணம் செய்து திருமுறைப் பணியில் ஈடுபட்டு வரும் இவர், எந்நேரமும் இறைப்பணியில் தன்னை அர்ப்பணித்து வருபவர்.
எதிர்வரும் 25-ஆம் திகதி வத்தளை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வில் ஓதுவார் பணி புரிவதற்காக இவர் இலங்கை வருகை தருகிறார்.
இதனையொட்டி, இவரைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில், அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா வியாழக்கிழமை (25)மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட தருமையாதீன பண்ணிசை வகுப்பு குழுவினர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பயிலுனர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.



