அரசாங்கத்தினால் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், ஓட்டோ (மூன்று சக்கர வண்டி) தொழிற்துறை கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்றும், இதன் காரணமாகக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தேசிய கூட்டு ஓட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் ஒரு தடவை எரிபொருள் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர்; இதன் காரணமாக, தற்போது ஒட்டுமொத்தமாக எரிபொருள் விலை சுமார் 36 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலைமையின் கீழ், ஓட்டோக்களின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை ஆகக்குறைந்தது 130 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகச் செயலாளர் தெரிவித்தார். எரிபொருள் விலைக்கு மேலதிகமாக, கிரீஸ் மற்றும் ஒயில் (Engine Oil) ஆகியவற்றின் விலைகளும் கட்டுபாடின்றி அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆராயாமல் இருப்பது ஒரு பிரச்சினையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், நுகர்வோரைப் பாதுகாப்பதே தமது சங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என ரோஹண பெரேரா வலியுறுத்தினார்.
“கட்டணங்களை அதீத அளவில் அதிகரித்தால் நுகர்வோர் ஓட்டோ சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடக் கூடும். எனவே, விலைக் கட்டுப்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடி ஒரு நியாயமான தொகையைத் தீர்மானிக்க வேண்டும்,” என அவர் கூறினார்.
அதேவேளை, சில மொபைல் செயலி (Mobile App) நிறுவனங்கள், ஓட்டுநர்களின் உழைப்பிலிருந்து பெருமளவிலான தரகுப் பணத்தைப் (Commission) பெற்றுக்கொண்டு அவர்களைச் சுரண்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியைச் சந்திக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த தேசிய கூட்டு த்ரீவீலர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்; வீதிப் போக்குவரத்து அதிகாரசபை இதில் உடனடியாகத் தலையிட்டு, ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவானதொரு நியாயமான கட்டணக் கொள்கையை வகுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


