இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காகப் பொருட்களினதும் சேவைகளினதும் வரிகள் பாரியளவில் உயர்த்தப்பட்டன. இதில் ஒரு விசித்திரமான முரண்பாடு என்னவென்றால், ஏனைய வரிகள் அனைத்தும் உயர்த்தப்பட்ட போதிலும், சிகரெட்டின் மீதான வரி சதவீதம் மட்டும் குறைவடைந்துள்ளது.
ஒரு சிகரெட்டின் சில்லறை விலையில் வரி 7.2% புள்ளிகளால் குறைந்துள்ளது. அரசாங்கக் கொள்கைப்படி, இந்த வரி விதிக்கப்படாததன் விளைவாக ஆண்டுதோறும் சுமார் 17.3 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.
உலக சுகாதார தாபனம் (WHO) பரிந்துரைத்துள்ள வரி விகிதத்தை விதிப்பதன் மூலம், அரசாங்கம் மிக இலகுவாக இந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மற்றைய வரிகள் உயர்வு; சிகரெட் மட்டும் விலக்கு!
2021-ஆம் ஆண்டிற்கும் 2026-ஆம் ஆண்டிற்கும் இடையில், தனிநபர் மற்றும் நிறுவன வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. பெறுமதி சேர் வரி (VAT) 8%-லிருந்து 18%-ஆக அதிகரித்தது. இது தவிர, 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியும் (SSCL) அறவிடப்படுகிறது.
2024 ஜனவரி முதல், முன்னர் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகள் மீதும் VAT வரி விதிக்கப்பட்டது. ஆனால், சிகரெட்டின் மீதான வரி மட்டும் இந்த உயர்வைக் காணவில்லை.
சிகரெட்டின் வரி வீழ்ச்சியானது சத்தமில்லாமல் நடந்துள்ளது. இது ஒரு செயலின் மூலம் நிகழவில்லை, மாறாகச் செய்யப்பட வேண்டிய திருத்தத்தைச் செய்யாததன் (செயற்படாமை) விளைவாகவே உருவாகியுள்ளது.
சிகரெட் மீதான வரி பெரும்பாலும் ‘கலால் வரி’ (Excise Tax) மூலம் பெறப்படுகிறது. இது பெறுமதி சேர் வரி (VAT) போலல்லாமல், பொருட்களின் விலை உயரும்போது தன்னிச்சையாக உயருவதில்லை. எனவே, உற்பத்தியாளர்கள் சிகரெட்டின் விலையை உயர்த்தும்போதெல்லாம், சில்லறை விலையில் வரி விகிதத்தின் பங்கு குறைந்து விடுகிறது.
சர்வதேச அளவுகோலும் இலங்கையின் நிலையும்
உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரைப்படி, ஒரு சிகரெட்டின் சில்லறை விலையில் 75% வரியாக அறவிடப்பட வேண்டும். 2018-ஆம் ஆண்டில் இலங்கை இந்த சர்வதேச அளவுகோலை அண்மித்து (74%) இருந்தது. ஆனால் 2026-ஆம் ஆண்டில் அது 66.8% ஆகக் குறைவடைந்துள்ளது.
சர்வதேச கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 12 ரூபாவிலும் 9 ரூபா வரியாக இருக்க வேண்டும்; ஆனால் தற்போது இலங்கை வெறும் 8 ரூபாவை மட்டுமே வரியாக அறவிடுகிறது. இதனால், ஒவ்வொரு 12 ரூபாவிற்கும் அரசாங்கம் 1 ரூபாவை இழக்கிறது.
இது ஏன் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்?
- வருமான இழப்பு: வரி சதவீதத்தை 75%-ஆக அதிகரிப்பதன் மூலம், சில்லறை விலையில் எந்த மாற்றமும் இன்றி அரசாங்கம் மேலதிகமாக 17.3 பில்லியன் ரூபா வருவாயைப் பெற முடியும்.
- சமூகப் பயன்: இந்தத் தொகையானது, வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை விட 1.2 மடங்கும், ஊட்டச்சத்து ஒதுக்கீட்டை விட 1.3 மடங்கு அதிகமாகும்.
- அரசாங்கத்தின் கடமை: 2003-ஆம் ஆண்டு புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு மகாநாட்டில், ஒழுங்கான வரி அதிகரிப்பு மூலம் பணவீக்கத்தை எதிர்கொள்வதாகவும் வருமானத்தை ஈட்டுவதாகவும் இலங்கை சர்வதேச வாக்குறுதி அளித்துள்ளது. தற்போதைய அணுகுமுறை அந்த வாக்குறுதிக்கு மாறாக உள்ளது.
தீர்வு என்ன?
இந்தக் கொள்கையைச் சீரமைப்பது மிகவும் எளிதானது. சிகரெட் வரி கலால் வரி மூலம் அறவிடப்படுவதால், இதற்காகப் பாராளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றவோ அல்லது அனுமதி பெறவோ தேவையில்லை. நிதி அமைச்சின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த மாற்றத்தை, ஜனாதிபதி ஒரு வர்த்தமானி அறிவித்தல் (Gazette) ஊடாக ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியும்.
சிகரெட் வரியை 75%-ஆக உயர்த்துவது ஒரு முரண்பாட்டைச் சரிசெய்வது மட்டுமல்ல; நாட்டின் வருமானத்தை வலுப்படுத்தி, அதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதற்கோ அல்லது சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கோ அந்த நிதியைப் பயன்படுத்த வழிவகுக்கும்.
ஆய்வு: நிஷான் டி மெல் மற்றும் ராஜ் ராஜகுலேந்திரன்

