உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து சிகிரியா மற்றும் காலி கோட்டை அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
1911ஆம் ஆண்டு காலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சீன மற்றும் பாரசீக மும்மொழிகளிலான கல்வெட்டு மற்றும் பாணந்துறை விவாதம் தொடர்பான விசேட எழுத்து மூல ஆவணங்களும் சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சிகிரியா மற்றும் காலி கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அவை உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது.
முறையற்ற விதத்தில் கட்டடங்களை கட்டுவதற்கு கடந்த காலங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அப்பகுதிகளில் பெருமளவான மக்கள் வசித்து வருகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க தளமான சிகிரியா, இன்று வரை இலங்கையின் அதிசயங்களை உலகுக்குச் சொல்லும் சின்னமாக உள்ளது.
எனினும் தற்போது சிகிரியாவை சுற்றி சுமார் 124 கட்டடங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யுனெஸ்கோ அமைப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து சிகிரியாவை அண்டிய பகுதிகளில் வசித்து வருபவர்களை அகற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக 15 நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட குழு நியமக்கப்பட்டுள்ளதுடன், முறையான திட்டத்தைத் தயாரிப்பதன் மூலம் மக்களை அங்கிருந்து அகற்ற முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார். R