
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களைத் தடுத்து நிறுத்தத் தவறியதன் மூலம், குற்றவியல் ரீதியாகத் தமது கடமையை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கோரிக்கை ஒன்றினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதவான் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கடந்த விசாரணையின் போது குற்றவாளிக் கூண்டிலிருந்து தான் வழங்கிய வாக்குமூலத்தில் விடுபட்ட சில புதிய விடயங்களைச் சேர்ப்பதற்கு அனுமதிக்குமாறு பூஜித ஜயசுந்தர கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதவான் குழாம், பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டியது:
குற்றவாளிக் கூண்டிலிருந்து ஒரு பிரதிவாதி தனது தரப்பு நியாயத்தைக் கூறுவது அவருக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு வரப்பிரசாதமாகும்.அந்த வரப்பிரசாதத்தை ஒரு பிரதிவாதி ஏற்கனவே முழுமையாக அனுபவித்துவிட்டார்.
சட்டத்தின் படி, அந்த வாய்ப்பினை மீண்டும் மீண்டும் ஒருவருக்கு வழங்குவது முறையற்றது என்பதுடன், இது தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும்.
2019 ஏப்ரல் 21 அன்று கத்தோலிக்கத் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினர் நடத்திய தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களில் 275 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக 855 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை எதிர்வரும் மே மாதம் 22-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் இரு தரப்பு சட்டத்தரணிகளையும் தமது இறுதி வாதங்களை முன்வைக்குமாறு பணித்தது.

