
மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே காவலில் வைக்கப்பட்டு நடத்தப்படும் விதம் குறித்து, அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கவலைகளுடன் தற்போது ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,…
சல்லே ஒரு நீதவானின் விளக்கமறியல் உத்தரவின் கீழ் அல்லாமல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இங்கு ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்த பல செயற்பாட்டாளர்களின் தற்போதைய மௌனமாகும். அவர்களின் இந்தத் திடீர் மௌனம், கொள்கை மற்றும் முரண்பாடற்ற தன்மை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்; ஆனால், அந்த நீதி எந்தவொரு பக்கச்சார்பும், அரசியல் செல்வாக்கும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாடும் இன்றி வழங்கப்பட வேண்டும். உண்மையை நோக்கியதாக இல்லாமல், அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணைகள் நடத்தப்பட்டால், அது இன்னமும் உண்மையான நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக முடிந்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இதேவேளை, அந்த ஆணைக்குழுவின் அறிக்கை அதன் கண்டுபிடிப்புகளைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளதுடன், அலட்சியப்போக்கிற்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்பானவர்களையும் அடையாளம் கண்டுள்ளது.
முரண்பாடான விடயம் என்னவென்றால், அந்த கண்டுபிடிப்புகளுடன் தொடர்புடைய சில நபர்களே தற்போது இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள். எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானது; ஆனால், அரசியல் உள்நோக்கம் கொண்ட விசாரணைகள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதியை வழங்காது. இதுவே எனது நேர்மையான கருத்தாகும்.

