ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அத்தகைய அச்சுறுத்தல்களை விடுப்பது சர்வதேச விதிகளுக்குப் புறம்பானது என ரஷியா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய ஆவேசமான நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதோடு, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
மேலும், வர்த்தக வரிகளை உயர்த்துவதன் மூலம் ஈரானின் நட்பு நாடுகளை அச்சுறுத்தித் தங்களுக்குச் சாதகமாகப் பணிய வைக்க அமெரிக்கா முயற்சிப்பதையும் ரஷியா கண்டித்துள்ளது. தன்னிச்சையான இத்தகைய முடிவுகள் சர்வதேச உறவுகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்கா தனது போக்கைக் கைவிட வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியுள்ளது.


