ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அதிரடி பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானின் செல்வாக்கு மிக்க துணை இராணுவப் படையான ‘புரட்சிகர காவற்படை’ (Revolutionary Guard) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்த முற்பட்டால், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இப்பிராந்தியத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பல ஆண்டுகளுக்கு முடக்குவோம்” என்று எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது ஈரானின் பல ஊடகங்களில் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“நாங்கள் இதுவரை பெரும் பொறுமையைக் கடைப்பிடித்தோம். எமது பதில் தாக்குதலுக்கான இலக்குகளைத் தெரிவு செய்வதில் சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டிருந்தோம். ஆனால், இனிமேல் அத்தகைய கட்டுப்பாடுகள் எவையும் கிடையாது. அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன.”
உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானின் உட்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என ட்ரம்ப் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்தே ஈரானின் இந்த ஆக்ரோஷமான அறிக்கை வெளியாகியுள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


