ஈரான் – அமெரிக்கா இடையேயான பேச்சுக்கள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல கட்டங்களாக பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரானின் அணு ஆயுதக் கொள்கை கைவிடல், ஹோர்முஸ் நீரிணை திறப்பு என பல்வேறு கோரிக்கைகள் அமெரிக்காவால் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வாரம் பேச்சு முடிவுபெற்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் ஹொர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஈரான் – அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை பாதித்தன.
இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி தெரிவிக்கையில்,
பேச்சுக்கள் தொடர்கின்றன. அடுத்த வாரம், அநேகமாக வரும் செவ்வாய்க்கிழமை அன்று பேச்சு மீண்டும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். தற்போது உள்ள ஒரு இடைவெளி சாதாரணமானதுதான். பேச்சில் முறிவு ஏற்பட்டது போன்றதல்ல.
அடுத்த வாரம் பேச்சு தொடங்கும்போது, எங்கள் தூதுக்குழுவும் அங்கு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். (a)

