இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது நேற்று (15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும். ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வருவதன் மூலம், இரு நாட்டின் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும்.
இந்த ஒப்பந்தங்கள், இரு நாடுகளின் கூட்டு லட்சியங்களை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் உறுதியான வாய்ப்புகளாக மாற்றுகின்றன.
இந்த வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பல துடிப்பான துறைகள் இங்கிலாந்தின் சந்தையில் இனி வலுவாக நுழைய முடியும்.
மேலும், இது தொழில்நுட்பம், தொழில்துறை சேவைகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதுடன், திறமையான இந்தியர்கள் அங்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தமானது, இங்கிலாந்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் இந்திய தொழில்துறை நிபுணர்களுக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குவதோடு, இந்திய நிறுவனங்களின் போட்டித் தன்மையையும் வலுப்படுத்தும்.
இத்தருணம் நமது இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையையும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால நோக்குடைய நல்லுறவையும் உருவாக்கும். கூட்டு வளர்ச்சியை நோக்கி இந்தியாவும் இங்கிலாந்தும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். (a)

