
வாலகிருஸ்ணா
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) , எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பிள்ளையான் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனை, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் கல்லடியில் உள்ள காணிப் பிரச்சினை தொடர்பான வழக்குகள் இன்றைய நீதிமன்ற விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.
இன்றைய தினத்தில் சாட்சிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். விசாரணையின் போது, பிள்ளையான் தரப்பு சட்டத்தரணிகள், அவரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இவ்வழக்கினைச் சாதாரண வழக்கிற்கு மாற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கினைப் பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையான் அவர்களை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. அதேபோன்று, கல்லடி காணிப் பிணக்கு தொடர்பான வழக்கினை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
2008ஆம் ஆண்டில் டி-56 ரக துப்பாக்கிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், குற்றப்புலனாய்வுத் துறையினரால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன:
2008 ஜனவரி 09: மட்டக்களப்பு கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை.
2008 மே 22: காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை.
2008 ஆகஸ்ட் 20: வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் ஆயுதமேந்திய குழுவினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை.
மேற்கண்ட வழக்குகளில் சிவனேசதுரை சந்திரகாந்தன் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டபோது கருத்துத் தெரிவித்த பிள்ளையான், “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க்குற்றச்சாட்டுகள்; போலி குற்றச்சாட்டுகள். அனுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ஊடகவியலாளர்களைப் பார்த்து, “இது உங்களுக்குச் சந்தோஷமான விடயம்தானே?” என்றும் வினவினார்.

