அதன்பின், பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ”கடுமையான கட்சி பணி செய்ததால் தான் மீண்டும், போட்டியிட வாய்ப்பு தரவுள்ளனர். இதில் எந்த மேஜிக்கும் இல்லை. இது ஆளுநராக இருந்த தமிழிசைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தான் கட்சியில் சீட் கொடுக்கப்படுகின்றது. இதை ஒரு வாய்ப்பாகத் தான் கருதுகிறேன். ஆளுநராக இருக்கும்போது திமுகவை விமர்சிக்க முடியவில்லையே என நினைத்தது உண்டு. அவ்வாறு என்னிடம் திமுகவை விமர்சிக்க எண்ணற்ற காரணங்கள் உண்டு. அதைச் சொன்னால் நீங்களும் தாங்கமாட்டார்கள். அவர்களும் தாங்கமாட்டார்கள்(சிரித்துக்கொண்டே). நிறைய இருக்கிறது. நாங்கள் எல்லாம் களத்தில் குதித்து இருப்பது அந்த களங்கத்தை துடைக்கவே களத்தில் குதித்திருக்கிறோம். மரியாதைக்குரிய கிஷன் ரெட்டி இங்கு இருக்கிறார். முதலமைச்சர்கள் ஆளுநர்களை மதிப்பது இல்லை. நேர்மையான ஆளுநரான எனக்கு எந்த ஒரு புரோட்டாகாலும் கொடுக்காமல் ஒரு முதலமைச்சர் இருந்தார். எந்தவித கொடியேற்றத்தையும் கொடுக்காமல் ஒரு முதலமைச்சர் இருந்தார். ஆளுநர் உரையினையே கொடுக்கவிடாமல், ஒரு முதலமைச்சர் நடந்துகொண்டார். அப்போது எல்லாம் முதலமைச்சரை கேள்விகேட்க மாட்டார்கள். இன்னொன்று கேட்கிறேன், அவர்களுக்கு எல்லாம் ஆளுநர் பதவி தேவையே இல்லை என்றால், 18 ஆண்டுகளுக்கும் மேலாக, கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏன் ஆளுநர்கள் அவசியமில்லை என்று இப்போது சொல்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநரை குற்றம்சாட்டுகிறார்கள்.