Last Updated:
T20 World Cup இந்தியா போட்டியை புறக்கணிக்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்து, ஐசிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
ind ஐசிசி விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிக்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்வாங்குவது குறித்து பரிசீலித்து வருதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுமதி மறுத்துள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 1300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு தாங்கள் ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்தப் புறக்கணிப்பால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இது பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும். இத்தகைய பின்விளைவுகளால், பாகிஸ்தான் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஐசிசியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐசிசி-யைத் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் வெறும் கற்பனை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் தெரிவித்துள்ளார். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் யார் முதலில் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள் என்பது தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Feb 08, 2026 12:47 PM IST


