
ஐசிசி ஆடவர் T20 உலகக்கோப்பை தொடரில் ஓமான் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி இன்று (12) 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியுடன் தொடரில் இலங்கை அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை உறுதி செய்துள்ளது.
குழு B அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி பல்லகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணியின் தலைவர் ஜடின்தர் சிங் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய வனிந்து ஹஸரங்கவிற்கு பதிலாக துஷான் ஹேமன்த இலங்கை அணியில் இணைக்கப்பட்டார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு தொடக்கம் அதிரடியாக அமைந்தது. கமில் மிஷார ஆரம்பத்தில் வெளியேறினாலும், குசல் மெண்டிஸ் மற்றும் பவன் ரத்நாயக்க இணைந்து ஓமான் பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்தினர். பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் 45 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்து தொடர்ந்து இரண்டாவது அரைச்சதத்தை பதிவு செய்தார்.
பின்னர் இறுதி ஓவர்களில் களமிறங்கிய அணித்தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் பெற்றார். அவர் 19 பந்துகளில் அரைச்சதம் அடித்து T20 உலகக்கோப்பை வரலாற்றில் வேகமான அரைச்சதம் பெற்ற அணித்தலைவராக ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் 226 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய ஓமான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. துஷ்மன்த சமீராவின் வேகப்பந்து வீச்சில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த ஓமான் அணியில் மொஹமட் நதீம் மட்டும் உறுதியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்கள் பெற்றார். இறுதியில் ஓமான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 120 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஸன 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், துஷ்மன்த சமீரா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். துனித் வெல்லாலகே மற்றும் துஷான் ஹேமன்த தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பவன் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 16ஆம் திகதி எதிர்கொள்ள உள்ளது.

