Last Updated:
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி இனி மருந்தகளில் எந்த வகையான சிரப்புகளையும் வாங்க முடியாது.
இந்தியாவில், இனி மருத்துவர் பரிந்துரை இன்றி, இருமல் மருந்து உட்பட எவ்வித சிரப்களையும் மருந்தகங்களில் வாங்க முடியாது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலங்களில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருமல் மருந்துகளால் குழந்தைகள் பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், இருமல் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், நடப்பாண்டு தொடக்கத்தில், மத்திய அரசு வெளியிட்ட மருத்துவ நிபுணர்களுக்கான வழிகாட்டி கையேடு வரைவில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன் நீட்சியாக, தற்போது மருந்துகள் விதி 1945-ல் திருத்தம் செய்து மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய மருந்து வகைப்பட்டியலான அட்டவணை K-யில் இருந்து இருமல் மருந்து உட்பட அனைத்து வகையான சிரப்புகளையும் நீக்கம் செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், மருத்துவர்களின் பரிந்துரை இன்றி இனி மருந்தகளில் எந்த வகையான சிரப்புகளையும் வாங்க முடியாது.


