Last Updated:
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 9 மாதங்களுக்குப் பிறகு டிராகன் விண்கலம் மூலம் புளோரிடா கடலில் தரையிறங்க உள்ளார்.
இந்தியா தனது புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்க காத்திருப்பதாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் நாளை (19 ஆம் தேதி) பூமிக்குத் திரும்புகிறார். அவர் உட்பட தற்போது நான்கு பேர் பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டார்லைனர் மூலமே அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியிருந்தனர்.
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள மற்ற இரு விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக நான்கு பேர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அவர்களை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கைகுலுக்கி விண்வெளி நிலையத்திற்கு வரவேற்றனர்.
சுனிதா வில்லியம்ஸ் அடங்கிய குழுவினரை பூமிக்கு திரும்புவதற்கான பணிகள் இன்று காலை தொடங்கியது. டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை அதிகாலை 2.41 மணியளவில் Deorbit பணிகள் நிறைவு பெறும் என்றும் டிராகன் விண்கலம் நாளை அதிகாலை 3.27 மணியளவில் புளோரிடா கடல் பகுதியில் தரையிறங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்க உள்ளார்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது குறித்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய மக்களின் சார்பாக சுனிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம் அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது, சுனிதா வில்லியம்ஸை பற்றி அமெரிக்க அதிபரிடம் விசாரித்ததாகவும் கூறினார். 140 கோடி இந்தியர்களும் சுனிதாவின் சாதனையில் பெருமிதம் கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்திய மக்களின் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். பூமிக்கு திரும்பிய பிறகு இந்தியாவில் சுனிதாவை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
March 18, 2025 9:10 PM IST
Sunita Williams: பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. “ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி கடிதம்!


