பாலக்காடு:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலையை சேர்ந்த லாரி டிரைவர் ஷோஜோ ஜோன், 55, எனபவர், பாலக்காடு நகர் அருகே உள்ள காடாங்கோடு வாடகை வீட்டில் இருந்தார்.
கேரளா மாநில கலால் துறை கமிஷனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாலக்காடு கலால் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான படையினர், இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, 2 கிலோ, ‘ஹாஷிஷ்’ போதைப் பொருளை கைப்பற்றினர்; ஷோஜோ ஜோனை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் விற்பனை செய்வதற்காக, கொள்முதல் செய்த இதன் மதிப்பு, 25 லட்சம் ரூபாய் இருக்கும் என்பது தெரிந்தது.
நேற்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்வதற்காக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கலால் துறையின் பாலக்காடு அலுவலக லாக்கப்பில் ஷோஜோ ஜோன், தான் அணிந்திருந்த வேட்டியை பயன்படுத்தி துாக்கிலிட்டு இறந்தார்.
அவர் தானாக துாக்கிட்டுக் கொள்ளும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. எனினும், அவரது மனைவி ஜோதி, தன் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பணியில் கவனமாக இல்லாத, நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த சிவில் கலால் அதிகாரிகளான மது, ரஞ்சித் ஆகியோரை ‘சஸ்பெண்ட்’ செய்து, கலால் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement