தங்கவயல் : ”போதைப் பொருள் தடுப்புக்கு மாணவர்கள் முன் வரவேண்டும்,” என்று நீதிபதி கணபதி குருசித்த பாதாமி அழைப்பு விடுத்தார்.
போலீசார் நடத்தும் 50வது மாரத்தான் ஓட்டமான சுவர்ண மஹோற்சவத்தை முன்னிட்டு, ‘போதைப் பொருளற்ற தங்கவயல்’ என்பதை விளக்கி, நேற்று தங்கவயலில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.
ஓட்டத்தை துவக்கி வைத்து, தங்கவயல் மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி கணபதி குருசித்த பாதாமி பேசியதாவது:
போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படுகிறது. உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. சிறியவர், பெரியவர் என எல்லோருமே ஒருங்கிணைந்து போதைப் பொருளை ஒழிக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் தான், நாளை நாட்டின் பிரஜைகள். வீடும், நாடும் உங்களை தான் நம்பி உள்ளது.
சிறந்த சமுதாயத்தை உருவாக்க போதைப் பொருளை நெருங்க விடாமல் தடுக்க மாணவர்கள் முன் வரவேண்டும். போதையின் மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்துங்கள். தரமும், மதிப்பும் கூடும். இதற்காகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.பி., சாந்தராஜு பேசுகையில், ”போதைப் பொருள் இளைய சமுதாயத்தை கெடுக்கிறது. இதை விற்பது பற்றி தெரிய வந்தால் போலீசுக்கு தகவல் கொடுங்கள். சமுதாயத்தை சீர்க்கும் போதைப் பொருளை தடுக்க போலீசுடன் அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சிலர், போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரிகிறது,” என்றார்.
நீதிபதி முஜாபர் மஞ்சரி, வக்கீல்கள் சங்க தலைவர் ராஜகோபால் கவுடா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட பள்ளி – கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
ராபர்ட்சன்பேட்டை சுராஜ் மல் சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டம் அம்பேத்கர் சாலை, உரிகம் ரயில் நிலையம், ஐந்து விளக்கு பகுதி, ஹென்றீஸ், டோல்கேட் சதுக்கம், பெமல் தொழிற் சாலை, வழியாக ஐந்து கி.மீ., துாரம் சென்று பெமல் நகர் போலீஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது.
போதைப்பொருள் தடுப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று மாரத்தான் ஓட்டம் துவங்கியது. இடம்: தங்கவயல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்