Last Updated:
மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக 24 வருடங்களில் எந்த பட்டியலை கொண்டு வென்றது என கேள்வி எழுப்பினார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “கடந்த 24 வருடங்களாக எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு நீங்கள் (பாஜக) வென்றீர்கள்? தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியல் போலியானது என்றால், உங்கள் அரசும், உங்கள் பதவியும் பொய்யானதுதான்” என சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான போராட்டத்தில் பேசினார்.
இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டுவருகிறது. வரும் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள பிகார் மாநிலத்தில் முதலில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் பணியை முடித்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். இந்தப் பணி இன்று முதல் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணி மேற்கொண்டார்.
பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஆதார் அட்டைக்கு நீங்கள் (மக்கள்) எவ்வளவு கட்டணம் செலுத்தினர். மத்திய அரசு, ஆதார் அட்டைக்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ. 1000 கட்டணம் வசூலித்துவிட்டு, தற்போது வாக்காளர் பட்டியலுக்கும், ரேஷன் அட்டைக்கும் ஆதாரை ஏற்கமாட்டேன் என்பதா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
மத்தியில் இருக்கும் ஆட்சியை நாட்டில் இருந்து அகற்றுவதுதான், இதனை எல்லாம் சரி செய்ய ஒரு சிறந்த வழி. கடந்த 24 வருடங்களாக எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு நீங்கள் (பாஜக) வென்றீர்கள்? தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியல் போலியானது என்றால், உங்கள் அரசும், உங்கள் பதவியும் பொய்யானதுதான். அவர் (பிரதமர் மோடி) வந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டவுடன், அதனை முதலில் எதிர்த்தது நான்தான். கருப்புப் பணத்தை மீட்டெடுத்தீர்களா? கருப்புப் பணம் யாரிடம் திரும்ப வந்தது? என்பதற்கு பதில் சொல்லுங்கள்” எனப் பேசினார்.
November 04, 2025 6:32 PM IST


