இந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக, பூரண சுயராஜ்யத்தை அடைய மகாத்மா காந்தியின் தலைமையில் ‘சட்ட மறுப்பு இயக்கம்’ தொடங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, 1930ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் காந்தியடிகள் தண்டி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். நாடு முழுவதும் மக்கள் எழுச்சி காணப்பட்டது. மேலும், 1930 ஜனவரி 26 அன்று எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பூரண சுயராஜ்ய உறுதிமொழியை நினைவுகூரும் வகையில் தான், 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.


