Last Updated:
இந்தியா முழுக்க ஒன்பது மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் எஸ்.ஐ.ஆர். பணி நடந்து வருகிறது. இது வரும் டிசம்பர் 4ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுவருகிறது.
நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் படிவங்கள் வழங்கி திரும்பப் பெறும் பணி வரும் டிசம்பர் 4ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அதன் பிறகு தேர்தல் ஆணையம் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, டிசம்பர் 9ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.
இந்தப் பணிக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அந்த வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி உள்ளிட்ட விவகாரங்களை மேற்கொண்டார்.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிக்கு மேலும் மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய கிசான் யூனியன் ஆசாத் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 15.35 கோடி வாக்காளர்களின் விவரங்களையும் பெற்று அதனை ஆய்வு செய்து ஒரு மாதத்தில் பட்டியல் வெளியிடுவது என்பது நிர்வாக ரீதியாக சிக்கல் நிறைந்திருக்கிறது.
எனவே உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு மேலும் மூன்று மாதம் காலம் அவகாசம் நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
November 29, 2025 5:30 PM IST
SIR | எஸ்.ஐ.ஆர். மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு…? – உச்ச நீதிமன்றத்தில் பாரதிய கிசான் யூனியன் ஆசாத் புதிய மனு


