இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், 72, இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய தேசிய சபைக்கு, 266 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
பொது தேர்தல்
மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 70 இடங்களை பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள் தேர்ந்தெடுக்கும்.
ஒரு தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 265 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 8ல் பொது தேர்தல் நடந்தது.
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் -தெஹ்ரீக்- – இ – இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் 75 இடங்களிலும், முன்னாள் பிரதமரான, மறைந்த பெனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. முத்தாகிதா குவாமி கட்சி, 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வென்ற போதும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோவின் பாக்., மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்தன. இவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற்ற சிறிய கட்சிகளும் ஆதரவு அளித்தன.
201 ஓட்டுகள்
இதையடுத்து, அந்நாட்டின் 33வது பிரதமராக பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர், ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று நடக்கும் பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக அவர் பதவியேற்க உள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக அந்நாட்டு பார்லி.,யில் 201 ஓட்டுகள் பதிவானதாக சபாநாயகர் அறிவித்தார்.
அவருக்கு எதிராக நின்ற இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர் 92 ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்