பெங்களூரு : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமண – ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த, 4,067 மாணவர்களுக்கு, 5.53 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டன.
வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, வருவாய் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமண – ஆர்ய வைஸ்ய சமூக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு, கல்வி உதவித்தொகையை செலுத்தினார்.
அவர் கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், பிராமணர் மற்றும் ஆர்ய வைஸ்யர் மேம்பாட்டுக் கழகம் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை, தொழில்முறை படிப்புகளை பயிலும் இரு சங்கங்களை சேர்ந்த 4,067 மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். படித்த பின், சமுதாயத்திற்கு உதவ வேண்டும்.
கர்நாடக பிராமண மேம்பாட்டு வாரியம் சார்பில், 2023 – 24ம் ஆண்டிற்காக, 2710 மாணவர்களுக்கு 3.78 கோடி ரூபாயும்; கர்நாடக ஆர்ய வைஸ்ய சமூக மேம்பாட்டு கழகம் சார்பில், 1,357 மாணவர்களுக்கு, 1.75 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முறை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய் வரையிலும்; இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு அதிகபட்சமாக 30,000 ரூபாய் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பூர்ணிமா, கர்நாடக ஆர்ய வைஸ்ய சமூக மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தீபாஸ்ரீ உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்