ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (Chief Operating Officer) சபிஹ் கான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுபற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், “நிறுவனத்தின் Senior Vice President of Operation அதிகாரியாக இருக்கும் சபிஹ் கான், இந்த மாத இறுதியில் ஜெஃப் வில்லியம்ஸ் வகித்துவந்த தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு மாறுவார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தில் 1995-ல் பணிக்கு சேர்ந்த சபிஹ் கான் தனது 30 ஆண்டுக்கால அனுபவம் மற்றும் திறமையால் இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார்.

இவரைப் பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், “சபிஹ் ஒரு சிறந்த மூலோபாயவாதி. ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியின் மையக் கட்டமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
மேம்பட்ட உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை முன்னோடியாகக் கொண்டுவர உதவியுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேல், தனது மதிப்புகளால் சபிஹ் கான் முன்னிலையில் இருக்கிறார். நிச்சயம் சிறந்த தலைமை இயக்க அதிகாரியாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்று புகழ்ந்திருக்கிறார்.
மேலும், இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் சபிஹ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

