ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 9-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்களில் வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் சாஹல், அவேஷ் கான், பர்கர் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக், 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அசத்தினார். அஸ்வின் 29, ஜுரல் 20, சஞ்சு சாம்சன் 15 மற்றும் ஹெட்மயர் 14 ரன்கள் எடுத்தனர். கடைசி ஐந்து ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. மார்ச் 23 ரன்களில் வெளியேறினார். ரிக்கி புஹி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டேவிட் வார்னர் இணைந்து 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர், 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்த், 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 9 ரன்களில் அபிஷேக் போரல் வெளியேறினார்.
ட்ரிஸ்ன் ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் படேல் இணைந்து 51 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. அதன் மூலம் 12 ரன்களில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஸ்டப்ஸ், 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். சாஹல் மற்றும் பர்கர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். அவேஷ் கான் 1 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இருந்தும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் அவேஷ் கான். அதன் மூலம் ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது. நடப்பு சீசனில் இதுவரை நடந்து 9 போட்டிகளிலும் சொந்த மைதானங்களில் (ஹோம் கிரவுண்ட்) விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளன.