ஆனால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டிக்கு முன்பு வரை, லீக் ஆட்டங்களில் 41, 20 மற்றும் 15 ரன்களும், அரையிறுதியில் 28 ரன்களையும் மட்டுமே எடுத்தார் ரோகித் சர்மா. இதனால், அவரது ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, ரோகித் சர்மா பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரோகித் சர்மாவின் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், அதை அவர் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்த ஷமா முகமது, இதுவரை இந்தியா பார்த்திராத மோசமான கேப்டன் என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தனது எக்ஸ் பதிவை ஷமா முகமது நீக்கினார். இப்படி தன் மீது அடுத்தடுத்து விழுந்த விமர்சனங்களை, அதிரடி சிக்ஸர்களால் அடித்து நொறுக்கியுள்ளார் ரோகித் சர்மா.
கேப்டன் என்ற பொறுப்புடன் இறுதிப் போட்டியில் வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்த ரோகித், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த ரோகித், 2 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர், நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார். இதுவே இந்தியா வெற்றி பெற மூல காரணமாக அமைந்தது என்பது யாராலும் மறுக்க முடியாதது.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார். ஐசிசி நடத்தும் தொடர்களில் 4-இல் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ரோகித், இரண்டில் வெற்றி தேடித் தந்துள்ளார்.
தன்னை விமர்சித்தவர்களுக்கு ஆட்டத்தின் மூலம் ரோகித் பதிலளித்துள்ள நிலையில், மோசமான கேப்டன் என கூறிய ஷமா முகமது, தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு தலைவணங்குவதாக எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். முன்னிலையில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு ரோகித் அழைத்துச் சென்றதாகவும் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
Also Read | Rohit Sharma | ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. என்ன தெரியுமா?
இதனிடையே, கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைப் போல, தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பை ரோகித் வெளியிடுவார் என்ற தகவலும் பரவியது. அடுத்த மாதத்துடன் 38 வயது நிறைவடையும் ரோகித் சர்மா, 2027-இல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பினர்.
ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும், வதந்தியை பரப்பாதீர்கள் எனவும் ரோகித் சர்மா நெத்தியடி பதிலை அளித்துள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனது பேட்டியில், “எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை, என்ன நடக்கிறதோ அது அப்படியே தொடரும்” என்று ரோகித் கூறியிருக்கிறார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 10, 2025 7:19 AM IST

