கோலாலம்பூர்:
கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் அருகே உள்ள கம்போங் ரஹ்மட் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 6,000 ‘யாபா’ போதை மாத்திரைகளுடன் 45 வயதுடைய தாய்லாந்து நாட்டவரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 7.30 மணியளவில் கிளாந்தான் மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (NCID) அச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் கிளாந்தான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமத் தெரிவித்தார்.
சந்தேகநபரின் உடலைச் சோதனையிட்டதில், மஞ்சள் நிறக் காகிதப் பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 655 கிராம் எடையுள்ள 6,000 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் RM60,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் சந்தேகநபர் ‘ஆம்ஃபெட்டமைன்’ (Amphetamine) போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதியானது. இருப்பினும், அவருக்கு முந்தைய குற்றப்பின்னணி எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இயங்கி வரும் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர் எனப் காவல்துறையினர் நம்புகின்றனர்.
தாய்லாந்திலிருந்து கிளாந்தானுக்குள் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விநியோகம் செய்ய, கோலோக் நதிக்கரையில் உள்ள சட்டவிரோதப் படகுத்துறைகள் மற்றும் ரகசியப் பாதைகளை இக்கும்பல் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மீது மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக இன்று முதல் ஆகஸ்ட் 22 வரை 7 நாட்கள் நீதிமன்றத் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் (Section 39B) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.



