கோத்தா கினபாலு, பிப்ரவரி 10, 2026:
கூட்டாட்சி அரசு நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் மற்றும் ஒரு பயண முகவர்களாக வேலைசெய்யும் (Travel Agency) இரண்டு ஊழியர்கள் ஆகியோரைச் சபா ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நேற்று இரவு கைது செய்தது.
விமானப் பயணங்களுக்கான அரசு வாரண்டுகளைப் (Air Travel Warrants) போலியாகத் தயாரித்து, அதன் மூலம் டிக்கெட்டுகள் வாங்கியதாகப் பொய்க் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட பயண முகமையிடமிருந்து அந்த அரசுத் துறைக்கு எந்தவொரு உண்மையான விமான டிக்கெட்டுகளும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த போலி உரிமைகோரல்களின் மொத்த மதிப்பு சுமார் RM1.3 மில்லியன் ஆகும்.
பிப்ரவரி 9 (திங்கட்கிழமை) இரவு 9:30 மணியளவில், வாக்குமூலம் அளிக்க வந்தபோது இவர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் ஆவர்.
இந்த வழக்கு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 18-ன் கீழ் (போலி விவரங்களைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்) விசாரிக்கப்பட்டு வருகிறது.
சபா MACC இயக்குநர் டத்தோ முகமட் புவாட் பி பஸ்ரா (Datuk Mohd Fuad Bee Basrah) இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். கைதானவர்களை இன்று (பிப். 10) கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தடுத்து வைத்து விசாரிக்க (Remand) அனுமதி கோரப்படும். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கூடுதல் நபர்கள் வரும் நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




