Last Updated:
முன்பு 50 சதவீத வரி இருந்தபோது இந்தியா சந்தித்த இழப்புகள் இனி தவிர்க்கப்பட்டு, ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸ் 18 குழுமத்தின் Rising Bharat உச்சிமாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அந்த வகையில் இரண்டாவது நாளான இன்று கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் சர்வம் AI இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நேற்றைய நிகழ்வில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றுப் பேசினார். அமெரிக்காவுடனான வர்த்தக உறவு குறித்துப் பேசிய அமைச்சர், இது ஒரு பரிணாம வளர்ச்சியடைந்து வரும் சூழல் என்றார். இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ‘பிரிவு 8’-ன் கீழ் ஒப்பந்தத்தை மறுசீரமைக்கத் தயங்க மாட்டோம் என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விவசாயம், கைவினைப்பொருட்கள், வைரங்கள் மற்றும் மருந்துத் துறைகள் பெரும் பயன் பெறும். குறிப்பாக, முன்பு 50 சதவீத வரி இருந்தபோது இந்தியா சந்தித்த இழப்புகள் இனி தவிர்க்கப்பட்டு, ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்துப் பேசிய அவர், 118 நாடுகளின் பங்கேற்புடன் நடந்த AI உச்சிமாநாட்டின் வெற்றியைச் சுட்டிக்காட்டினார். AI தொழில்நுட்பம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், குறிப்பாகச் சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற துறைகளில் இந்தியா உலகிற்குத் தலைமை தாங்கும் என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக அவர் விமர்சித்தார்.
தமிழக அரசியல் குறித்துப் பேசிய பியூஷ் கோயல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், நடிகர் விஜய்யுடன் பாஜகவிற்கு எந்த உறவும் இல்லை என்பதையும் குறிப்பிட்டு பேசினார்.


