Last Updated:
கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சிக்கும் போது வலது கால் சுண்டு விரலில் கடுமையாக தாக்கியது. இதையடுத்து வலியால் துடித்த ரிஷப் பந்திற்கு உடனடியாக மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காயம் காரணமாக ரிஷப் பந்த் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயமடைந்த நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதில் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர். மேலும் கருண் நாயருக்குப் பதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அணியில் இணைந்தார். இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலும், ராகுலும் 94 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் சுப்மன் கில் 12 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், காலில் ஏற்பட்ட காயத்தால் 37 ரன்களில் வெளியேறினார். முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சிக்கும் போது வலது கால் சுண்டு விரலில் கடுமையாக தாக்கியது. இதையடுத்து வலியால் துடித்த ரிஷப் பந்திற்கு உடனடியாக மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ரத்தம் வரும் அளவிற்கு பந்து தாக்கியதால் ஆட்டத்தை தொடர முடியாத நிலையில் ரிட்டையர் ஹர்ட் முறையில் ரிஷப் பந்த் வெளியேறினார்.
காயமடைந்த உடனே ரிஷப் பந்த் நடக்க முடியாத சூழலில் சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு காயமடைந்த உடனே ரத்தம் வந்த நிலையில் தற்போது ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரை ஆறு வாரங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து தொடரில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக அணியில் இஷான் கிஷன் இணையலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ தரப்பில் இதுதொடர்பாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 24, 2025 1:33 PM IST

