அமெரிக்கா எடுத்த முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று மனுவேல் நோரியேகாவின் (Manuel Noriega) கைது. பனாமாவின் ராணுவ சர்வாதிகாரியாக இருந்த நோரியேகா மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி புகார்களை அமெரிக்கா சுமத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்களை கூறி, 1989 டிசம்பரில் பனாமா மீது Operation Just Cause என்ற பெயரில் அமெரிக்கா படையெடுத்தது.
நோரியேகா, பனாமாவின் வாடிகன் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து அவரை வெளியே வரச் செய்ய, தூதரகத்தைச் சுற்றி ஒலிபெருக்கிகளை வைத்து 24 மணிநேரமும் உரத்த ‘ராக்’ இசையை ஒலிக்கச் செய்தது. இந்த அணுகுமுறை psychological warfare என்றழைக்கப்படுகிறது. காது ஜவ்வுகள் கிழிந்து போகும் அளவிற்கு இரைச்சல் இருந்ததால், 1990 ஜனவரி 3-ல் நோரியேகா அமெரிக்க படைகளிடம் சரணடைந்தார். அடுத்தது நாம் அனைவருக்கும் பரீட்சையமான சதாம் உசேன்.
2003-ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பிற்குப் பிறகு, அந்நாட்டு அதிபராக இருந்த சதாம் உசேன் தலைமறைவானார். பல மாதத் தேடலுக்குப் பிறகு, பதுங்கு குழியில் ஒளிந்திருந்த அவரை அமெரிக்கப் படைகள் கைது செய்தன. அவர் ஈராக் இடைக்கால அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
2004-இல் ஹைத்தியில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டபோது, அமெரிக்கப் படைகள் அதிபர் ஜீன்-பெர்ட்ரான்ட் அரிஸ்டைடை (Jean-Bertrand Aristide) விமானத்தில் ஏற்றி ஆப்பிரிக்க நாடுகளுக்கு அழைத்துச் சென்றன. அரிஸ்டைடை பாதுகாப்பாக வெளியேற்றியதாக அமெரிக்கா கூறியது, ஆனால் அரிஸ்டைட், தான் அமெரிக்க படைகளால் “கடத்தப்பட்டதாக” குற்றம் சாட்டினார்.
பிலிப்பைன்ஸ்-அமெரிக்கப் போரின்போது, பிலிப்பைன்ஸின் முதல் அதிபராகக் கருதப்பட்ட அகுனால்டோவை அமெரிக்கப் படைகள் ரகசியத் தாக்குதல் ஒன்றின் மூலம் கைது செய்தன. இது அமெரிக்கா ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்த ஆரம்பகாலச் சம்பவங்களில் ஒன்றாகும். நோரியேகா மற்றும் சதாம் உசேன் கைதுகளின்போது அந்நாடுகளின் மீது அமெரிக்கா ஒரு முழுமையான போரை நடத்திக்கொண்டிருந்தது.
ஆனால், மதுரோவோ சில மணி நேரங்கள் மட்டுமே நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மூலம், தூக்கி வரப்பட்டுள்ளார். இது ஒசாமா பின்லேடன் மீதான தாக்குதலைப் போன்றது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச சட்டத்தின்படி ஒரு நாடு மற்றொரு நாட்டின் தலைவரை வலுக்கட்டாயமாக அகற்ற உரிமை இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்தால் மட்டுமே ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க முடியும்.
பொதுவாக, ஒரு நாட்டின் அதிபருக்கு சர்வதேச அளவில் “சட்டப் பாதுகாப்பு” உண்டு. அவர்களை மற்றொரு நாட்டு நீதிமன்றம் விசாரிக்க செய்ய முடியாது. 2024 தேர்தலில் முறைகேடு செய்து மதுரோ பதவிக்கு வந்ததாக அமெரிக்கா கூறுகிறது.
இதனால் அவருக்கு ‘அதிபர் அந்தஸ்து’ பாதுகாப்பு செல்லாது என்பது அமெரிக்காவின் வாதம். அமெரிக்கா, RICO Act-டை பயன்படுத்தி தான் பிற நாட்டுத் தலைவர்களை கைது செய்கிறது. Racketeer Influenced and Corrupt Organizations என்பது தான் RICO சட்டம், அமெரிக்காவின் மிகக் கடுமையான மற்றும் சக்திவாய்ந்த சட்டங்களில் ஒன்றாகும்.
“கூட்டுச் சதி மற்றும் திட்டமிட்ட குற்றங்களை” தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம். அமெரிக்காவில் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் குற்றத்தைச் செய்யும் கீழ்மட்ட நபர்களைக் கைது செய்ய முடிந்ததே தவிர, குற்றத்திற்கு உத்தரவிட்ட பெரிய தலைவர்களை கைது செய்ய முடியவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க கொண்டுவரப்பட்டது தான் RICO சட்டம். மதுரோவின் ஆட்சியில் வெனிசுலா மக்கள் பசி, பட்டினி மற்றும் சித்திரவதைக்கு உள்ளாவதால், அவர்களைக் காப்பாற்ற RICO சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
பொதுவாக, ஒரு நாட்டின் தலைவர் போர்க்குற்றம் செய்திருந்தால், அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் விசாரணை செய்ய வேண்டும். ஆனால், அமெரிக்கா மதுரோவை ஒரு சாதாரணக் குற்றவாளியை போல, தனது நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்துகிறது. பதவியில் இருக்கும் அதிபரைக் கைது செய்தது சர்வதேச சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றத்தில் வாதிட மதுரோவின் வழக்கறிஞர்கள், திட்டமிட்டுள்ளனர்.
RICO Act | வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்கா எப்படி கைது செய்கிறது..? சர்வதேச சட்டம் சொல்வது என்ன?

