இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.