கோலாலம்பூர்:
PTPTN எனப்படும் உயர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த தவறுவது அல்லது நோக்கமுடன் கடனை செலுத்த தாமதிப்பது ஒரு குற்றம் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் சிரமத்தை எதிர்கொள்ளும் கடனாளிகளுக்கு கட்டண அட்டவணையை மாற்றிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
“PTPTN கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தாமதிப்பது சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் புறம்பான செயல். ஆனால் நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு அரசு எப்போதும் உதவிக்கரம் நீட்டும்,”
என்று அவர் கூறினார்.
மேலும், கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் ஏழை மாணவர்கள் PTPTN கடனைச் செலுத்த முடியாத சூழ்நிலைகளில் இருப்பதை அமைச்சு உணர்ந்து வருவதாகவும், அவர்களுக்கான கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், “வறுமை நிலை மாணவர்களுக்கான PTPTN கடன் தள்ளுபடி விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படும். ஆனால் மற்ற மாணவர்கள் தாமதப்படுத்தாமல் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது மறுசீரமைப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்,”
எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, PTPTN நிறுவனம் சமீபத்தில் கடன் திருப்பிச் செலுத்தல் விழிப்புணர்வு இயக்கத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளதுடன், கடனைச் செலுத்தாதவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.




