
2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் தயாரிப்பாக SpaDex என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதற்காக திங்கட்கிழமை இரவு 9.58 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு விண்கலன்கள் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளன. இதற்கான 48 மணி நேர கவுன்டவுன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.
இந்த இரண்டு விண்கலன்களும் பூமியில் இருந்து 355 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவி தாழ்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் அவை பூமியை சுற்றிவரும் போது டாக்கிங் முறையில் இணைக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இதையும் படிக்க: “உலகில் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு” – பிரதமர் மோடி பெருமிதம்!
இந்த சிக்கலான பணியைத்தான் SpaDex விண்கலம் மேற்கொள்ள உள்ளது. இந்த விண்கலத்தில் சேசர் மற்றும் டார்கெட் எனும் இரண்டு அமைப்புகள் உள்ளன. இரண்டு அமைப்புகளும் அதிவேகமாக பூமியைச் சுற்றி வரும் வேளையில், சேசர் அமைப்பு டார்கெட் அமைப்பை துரத்தி விரைவாக அதனுடன் இணைய வேண்டும். விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகே அவற்றை இணைக்கும் பணி நடைபெறும் என்று மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
விண்வெளியில் இருக்கும்போது இரண்டு விண்கலன்களை இணைப்பது மட்டும் இல்லாமல், இணைக்கப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்தும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது முதல் வேற்றுகிரக பயணங்கள் செய்வது வரை பல விண்வெளி செயல்பாடுகளுக்கு இந்த டாக்கிங் சிஸ்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 1969 ஆம் ஆண்டு நிலவில் மனிதன் முதன் முதலில் தரை இறங்கிய பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பயணித்த ஈகிள் விண்கலம், நிலவை சுற்றி வந்த கொலம்பியா ஆர்பிட்டர் விண்கலத்துடன் இணைந்ததை மனிதன் நிலவில் தரையிறங்கி கால் பதித்ததை விடவும் மிகப்பெரிய சாதனையாக கொண்டாடினர் அப்போதைய விஞ்ஞானிகள்.
பல ஆண்டுகளாக இந்த டாக்கிங் செயல்முறை செயல்பாட்டில் இருந்தாலும் தற்போது வரை எந்த நாடும் நிபுணத்துவம் பெறவில்லை. டாக்கிங்-கின் போது சிறிய பிழை கூட பேரழிவிற்கு வழிவகுக்கும். ‘இண்டர்ஸ்டெல்லர்’ ஆங்கில படத்தில் கூட, இந்த டாக்கிங் செயல் எவ்வளவு கடினமானது என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணித்த ஸ்டார் லைனர் விண்கலத்தின் டாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அவர் தற்போது வரை பூமிக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது.
இஸ்ரோவின் டாக்கிங் சோதனை வெற்றிபெற்றால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை அனுப்புவது முதல் இந்தியாவுக்கு விண்வெளியில் தனி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டம் வரை பலவற்றிக்கு அடித்தளமாக அமையும். அத்துடன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா வரிசையில் டாக்கிங் சிஸ்டத்தை வைத்திருக்கும் நான்காவது நாடு என்ற சாதனையும் படைக்கும்.
இந்த நிலையில், பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், பழவேற்காடு சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், பழவேற்காடு சுற்றுவட்டார மீனவர்கள் இன்று ஒருநாள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
December 30, 2024 6:56 AM IST
PSLV-C60 Rocket Launch: விண்வெளி மையத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு அடிதளம்..! இன்று விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் – முக்கியத்துங்கள் என்ன..?

