அந்த வகையில், தெரு ஓர வியாபாரிகளை ஆதரிக்கும் விதமாக, பிரதம மந்திரி தெரு ஓர வியாபாரியின் ஆத்மநிர்பர் நிதி (PM SVANidhi) என்கிற சிறு கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2023 மத்திய பட்ஜெட் உரையில் பேசும் போது, பிரதம மந்திரி தெரு ஓர வியாபாரியின் ஆத்மநிர்பர் நிதி திட்டத்தின் மூலம் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அதிக வட்டியைக் கொண்ட முறைசாரா கடன்களிலிருந்து விடுபட்டு பயனடைந்துள்ளதாகக் கூறினார்.
பிரதம மந்திரி சாலையோர வியாபாரியின் ஆத்மநிர்பர் நிதி (PM SVANidhi) என்றால் என்ன?
ஜூன் 1, 2020 அன்று கோவிட் 19 பெருந்தொற்றின் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, சாலையோர வியாபாரிகளுக்கு மானிய விலையில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இதன்மூலம், ரூ.10,000, ரூ.20,000 மற்றும் ரூ.50,000 வரையிலான பிணையமில்லாத தொழில் மூலதனக் கடன்களை தெரு ஓர வியாபாரிகள் பெற முடியும். மேலும், இந்தத் திட்டம் கடனைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக, ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியத்தையும், பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஆண்டுக்கு ரூ.1200 வரை கேஷ்பேக்கையும் வழங்குகிறது.
மேலும், இந்த கடன் தொகையை பெறுவதற்காக முன்கூட்டியே எந்தவித பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பிரதம மந்திரி ஸ்வநிதி தகுதி அளவுகோல்கள் என்ன?
மார்ச் 24, 2020 அன்று அல்லது அதற்கு முன்பு, நகர்ப்புறங்களில் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளும் பிரதம மந்திரியின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
சாலையோர வியாபாரிகளுக்கான தகுதி:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் (ULBs) வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ்/அடையாள அட்டை வைத்திருக்கும் சாலை வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற முடியும்.
கணக்கெடுப்பில் அடையாளம் காணப்பட்ட, ஆனால் விற்பனைச் சான்றிதழ்/அடையாள அட்டை வழங்கப்படாத விற்பனையாளர்களுக்கு, ஐடி அடிப்படையிலான பிளாட்ஃபார்ம் மூலம் தற்காலிக விற்பனைச் சான்றிதழ் உருவாக்கித் தரப்படும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அத்தகைய விற்பனையாளர்களுக்கு நிரந்தர விற்பனைச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை உடனடியாகவும், ஒரு மாத காலத்திற்குள் வழங்கவும் ஊக்குவிக்கப்படுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்பட்ட அடையாளக் கணக்கெடுப்பில் இருந்து விடுபட்ட தெரு ஓர விற்பனையாளர்கள் அல்லது கணக்கெடுப்பு முடிந்த பிறகு விற்பனையைத் தொடங்கியவர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்/நகர விற்பனைக் குழுவால் (TVC) அதற்கான பரிந்துரைக் கடிதம் (LoR) வழங்கப்பட்டவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வரம்புகளில், மேம்படுத்தப்படும் சுற்றுப்புறங்கள்/நகர்ப்புற/கிராமப்புறப் பகுதிகளின் விற்பனையாளர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்/நகர விற்பனைக் குழுவால் அதற்கான பரிந்துரைக் கடிதம் (LoR) வழங்கப்பட்டவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
தெரு ஓர விற்பனையாளர்கள், பிரதம மந்திரியின் ஸ்வநிதி போர்ட்டலில் அல்லது தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பொது சேவை மையம் (CSC) மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரி ஸ்வநிதி இப்போது நிறுத்தப்பட்டதா?
மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் காலம் டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்தது. ஜனவரி 01, 2025 முதல் கடன் பெறுவதற்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இருப்பினும், நிதி அமைச்சர் சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், வங்கிகளிடமிருந்து மேம்படுத்தப்பட்ட கடன்கள், ரூ.30,000 லிமிட்டுடன் யூபிஐ-இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவுடன் இந்த திட்டம் புதுப்பிக்கப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
February 17, 2025 8:16 PM IST

