Last Updated:
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது
2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மனைவியுடன் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்பு அளித்தனர்.
கடந்த 9 ஆண்டுகளில் முதன் முறையாக பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு வந்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் பிரதமர் செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
இன்றிரவு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி அதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
முன்னதாக தனது இஸ்ரேல் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த பிரதமர் மோடி தனது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், வலுவான நல்லுறவையும் இந்தியாவும் இஸ்ரேலும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விவசாயம், நீர் மேலாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திக்க உள்ளதாகவும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை தான் பெறவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi in Israel : அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு


