Last Updated:
செஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் மிகச்சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
3 நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூன் 27) முதல் இன்று வரை செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மைனியை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் யூபிஐ பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, Guardian of the Blue Horizon என்ற விருதை செஷல்ஸ் அதிபர் வழங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான அர்ப்பணிப்புக்கான உயரிய விருது இதுவாகும்.
விருதைப் பெற்ற பின்னர், தனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது இந்திய மக்களுக்கும், தனக்கும் பெருமை சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த விருதினை அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பிரதமர் பேசுகையில், “இரு நாடுகளும் தங்களின் தூதரக உறவுகளின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நேரத்தில் வழங்கப்படும் இந்த அங்கீகாரம், இரு நாடுகளின் நட்பை மேலும் வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்” என்று கூறினார்.
#WATCH | Victoria | During the press statement with Seychelles President Dr Patrick Herminie, PM Modi says, “It is a matter of immense pride and joy for me and for the 1.4 billion people of India, to be honored with the title of ‘Guardian of the Blue Horizon.’ I humbly accept… pic.twitter.com/6o2xABO0mC
— ANI (@ANI) June 28, 2026
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், சர்வதேச புலிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பசுமையான பூமியை உருவாக்கும் செயல்பாடுகளை நோக்கிய பிரதமர் மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த விருது அங்கீகரித்துள்ளது. நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரதமருக்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உணவு – வேளாண்மை அமைப்பின் அக்ரிகோலா விருது, சியோல் அமைதிப் விருது, ஐநா-வின் ‘புவி சாம்பியன்’ விருது உள்ளிட்ட, சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளுக்கு பிரதமருக்குக் கிடைக்கும் தொடர்ச்சியான கௌரவங்களில் இந்த அங்கீகாரமும் ஒன்றாக உள்ளது.
பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு, நிலையான வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்கு திட்டங்கள் உள்ளிட்டவற்றை பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டதாக செஷல்ஸ் அதிபர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருது, பிரதமர் மோடிக்கு கிடைத்த 34ஆவது சர்வதேச விருது என்பது குறிப்பிடத்தக்கது.
PM Modi honoured | பிரதமர் மோடிக்கு உயரிய விருதை வழங்கிய செஷல்ஸ்… இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?


