கோலாலம்பூர்:
சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (PERKESO) கீழ் வழங்கப்படும் அனைத்து சலுகைகளுக்கான விண்ணப்பங்களும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
PERKESO தலைமையகத்திற்கு இன்று முதன்முறையாக வருகை தந்த அமைச்சர், செய்தியாளர் சந்திப்பில் நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:


1. ‘Lindung Faedah’ அகப்பக்கம் (Portal)
முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் நிரந்தர ஊனச் சலுகை, தற்காலிக ஊனச் சலுகை, இயலாமை ஓய்வூதியம், வேலை விபத்துச் சலுகை மற்றும் சார்ந்திருப்போர் சலுகை போன்றவை அடங்கும்.
மேலும் ஆண்டுக்குச் சராசரியாக வரும் 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை இதன் மூலம் எளிதாகக் கையாள முடியும். இதனால் தொழிலாளர்கள் PERKESO அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய சுமை குறைவதுடன் வேகமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.
2. முதலாளிகளுக்கு 80% தள்ளுபடி (FCLB)
சந்தா தொகையைத் தாமதமாகச் செலுத்தியதற்காக (Late Contribution Payments) விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
இந்தச் சலுகை இன்று முதல் பிப்ரவரி 2026 இறுதி வரை அமலில் இருக்கும்.
இதனால் சுமார் 3 லட்சம் முதலாளிகள் (குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் – MSME) பயன்பெறுவர். மொத்தம் 157 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அபராதத் தொகைக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும்.
3. ‘Lindung 24/7’ புதிய திட்டம்
வேலையில் இல்லாத நேரங்களில் ஏற்படும் விபத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ‘Lindung 24/7’ எனும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் (மார்ச் அல்லது ஜூன் மாதத்திற்குள்) அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. எல்லை தாண்டும் தொழிலாளர்களுக்கான ஆய்வு
ஜோகூர் காஸ்வே (Causeway) வழியாகத் தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘Traveller Scheme’ எனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வு நடத்தப் பெர்கேசோவிற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.




