தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓர் ஓய்வூதியத் திட்டமாகும், இதன்மூலம் பெறப்படும் பணம் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தைகளின் செயல்திறனைப் பொறுத்து மாறுபடும். ஆனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக ரூ.10,000 உறுதியான ஊதியத்தை வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது ஏப்ரல் 1, 2025 முதல் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால், அதன்பிறகு மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற முடியாது.
UPSஇல் உங்கள் ஓய்வூதியத்தைக் கணக்கிடுவது எப்படி?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் உறுதி செய்யப்பட்ட பென்ஷன் தொகையை, பின்வரும் பேஅவுட் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிட முடியும்.
ஊதியம் = 50% x (கடந்த 12 மாத அடிப்படை ஊதியத்தின் கூட்டுத்தொகை / 12)
ஒருவரின் சேவை காலம் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே இது பொருந்தும். ஒருவேளை, ஒருவர் 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணியில் இருந்தால், பேஅவுட் விகிதத்தில் மாற்றம் இருக்கும்.
ஒரு ஊழியர் 25க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு தானாக முன்வந்து ஓய்வு பெற்றால், அவருக்கான ஊதியம் அசல் ஓய்வு தேதியிலிருந்து தொடங்கும். எடுத்துக்காட்டாக:
1. முழு உறுதி செய்யப்பட்ட ஊதியம் (25+ ஆண்டுகள் சேவை)
ஓய்வு பெறும் நேரத்தில் ஒரு ஊழியருக்கு சராசரி அடிப்படை ஊதியம் ரூ.12,00,000ஆக இருக்கும் என வைத்துக் கொள்வோம். மேற்குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சராசரி அடிப்படை ஊதியத் தொகையை 12ஆல் வகுக்க வேண்டும். எனவே, கடந்த 12 மாத சராசரி அடிப்படை ஊதியம் ரூ.1,00,000 ஆகும். பின்னர், அதை 50 சதவீதத்தால் பெருக்க வேண்டும். இதன்மூலம், ஊழியர் ரூ.50,000 ஓய்வூதியத்தைப் பெறுவார்.
இதையும் படிக்க: மார்ச் மாதத்தில் உங்கள் நிதி நிலையை பாதிக்கும் 5 மாற்றங்கள்… என்னென்ன தெரியுமா…?
2. விகிதாச்சார ஊதியம் (25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவை)
25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவை இருக்கும் பட்சத்தில், நாம் விகிதாச்சார காரணியை சேர்க்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் 20 ஆண்டுகள் பணியாற்றி பின்னர் ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், அவருக்கான விகிதாச்சாரம் 20/25 = 0.8ஆக இருக்கும். எனவே, ஊதியமானது 50% x 1,00,000 x 0.8 = ரூ.40,000ஆக இருக்கும்.
3. குறைந்தபட்ச உத்தரவாத ஊதியம்
ஓய்வு பெறும்போது ஒருவர் ரூ.15,000ஐ அடிப்படை ஊதியமாக பெற்றிருந்தால், அவரின் ஓய்வூதியம் ரூ.7,500ஆக இருக்கும். இது குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட தொகையை விடக் குறைவு என்பதால், அவருக்கு இறுதி ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.
March 06, 2025 1:59 PM IST
Pension Scheme | ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்… ஓய்வூதியத் தொகையை கணக்கிடுவது எப்படி…?

