பெங்களூரு, : ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நாசிர் உசேன் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபரை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் நடத்தியதால் சட்டசபை முடங்கியது. அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு திணறியது. இதனால், கூட்டத்தொடரை இன்றுவரை நீட்டித்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம், ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடந்தது. மாலையில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நாசிர் உசேன் ஆதரவாளர்கள், விதான் சவுதாவில், அவருக்கு மாலை அணிவித்துக் கொண்டாடினர்.
அவர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அவரது பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று இரண்டு முறை கோஷம் எழுப்பினார். சிறிது நேரத்தில் இந்த வீடியோ, ‘டிவி’ சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, பா.ஜ., தரப்பில் விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்நபரை கைது செய்ய வலியுறுத்தியும், காங்கிரஸ் அரசை கண்டித்தும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், காங்கிரஸ் அரசை கண்டித்து, பா.ஜ., தரப்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் பவனில் இருந்து, தேசியக் கொடியை ஏந்தியபடி, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று காலை விதான் சவுதாவுக்கு வந்தனர்.
சட்டசபை துவங்கியதும், எதிர்க்கட்சியினர் நுழைந்து, ‘பாரத் மாதா கீ ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினர். சம்பவம் குறித்து விவாதிக்க வாய்ப்பு தரும்படி, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.
ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் அமளி நிலவியது. சபாநாயகர் காதர் எவ்வளவு சொல்லியும், இரு தரப்பினரும் செவி சாய்க்கவில்லை.
அப்போது நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: விதான் சவுதாவுக்குள் பாகிஸ்தான் ஆதரவாளர் வந்தது எப்படி? அவரை அழைத்து வந்தது யார்? கோஷம் எழுப்பியவுடன், அங்கேயே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். இதை வெளிச்சம் போட்டு காண்பித்த ஊடகத்தினரை, சையத் நாசிர் உசேன் மிரட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை. இவ்விஷயத்தை அரசு எளிதாக எடுத்துக் கொண்டுள்ளது. மாநிலத்தின் 7 கோடி மக்களின் பாதுகாப்பாக திகழும் விதான் சவுதாவில், இந்த சம்பவம் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பா.ஜ., – சுனில்குமார்: ஒரு அமைச்சர், ஊடகத்தினரை மிரட்டி விமர்சித்துள்ளார். கோஷம் எழுப்பியவரை ஊடகத்தினர் ஏன் பிடித்து போலீசில் ஒப்படைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமூகத்தின் நான்காவது துாணாக விளங்கும் ஊடகத்தினரை மிரட்டுவது சரியில்லை.
அமைச்சர் பிரியங்க் கார்கே: என் பெயரை குறிப்பிட்டு பேசுவதற்கு என்ன பயமா? வெளிப்படையாக சொல்லுங்கள்.
(இந்த வேளையில், மீண்டும் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது)
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவத்தை, போலீசார் சுயமாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர். கோஷம் எழுப்பிய வீடியோ, ஆடியோ துணுக்குகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தடயவியல் ஆய்வறிக்கை வந்தபின், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது உண்மையானால், தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய சம்பவம், மாநிலத்தின் வேறு எந்த பகுதியில் நடந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் பாதுகாக்கும் கேள்வியே இல்லை.
அசோக்: சம்பவம் குறித்து, சையத் நாசிர் உசேன் அப்போதே அந்நபரை கண்டித்திருந்தால், பிரச்னை எழுந்திருக்காது. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது போல், கோஷம் எழுப்பிய போது அவர் மவுனமாக இருந்தார்.
வீடியோவில் தெளிவாக இருந்தாலும், தடயவியல் ஆய்வறிக்கை வர வேண்டும் என்பது சரியில்லை. அரசின் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று, முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
(இவ்வாறு கூறியபடியே, எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
இதனால், இரண்டாவது முறையாக சட்டசபையை ஒத்திவைத்தார். இதேபோல, மேலவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அதுவும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
சிறிது நேரத்துக்குப் பின், மீண்டும் சட்டசபை கூடியதும், பா.ஜ.,வினர் தொடர்ந்து தர்ணா நடத்தி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேசை மீது இருந்த காகிதங்களைக் கிழித்து வீசினர். இதற்கிடையில் சில அறிவிப்புகளை வெளியிட்ட சபாநாயகர், சபையை நாள் முழுதும் ஒத்திவைத்தார். இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் எனவும் அறிவித்தார்.
நேற்றுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறவிருந்தது. ஆனால், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு, அரசு தரப்பில் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.
எனவே இன்று முதல்வர் சித்தராமையா பதில் அளிப்பதற்காக, ஒருநாள் விஸ்தரிக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையில், பாக்., ஆதரவு கோஷம் தொடர்பாக, கவர்னரிடம் புகார் அளிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்