ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. அபுதாபியில் நடைபெற்ற சூப்பர் நான்கு சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் அரை சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடியான ஷகிப்சதா பர்ஹான் 24 ரன்களும், பக்கர் ஷமான் 17 ரன்களும் அடித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் ஹுசைன் தலத் மற்றும் முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். 18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி, 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது வித்தியாச கொண்டாட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். தற்போது அதேபோன்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் இதேபோல் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது கொண்டாடியதும், அதற்கு இலங்கை வீரர் பதிலடி கொடுத்ததும் வைரலாகி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி கமிந்து மென்டிஸ் அரை சதம் உதவியால் ஓரளவு ரன்கள் சேர்த்தது. அப்போது தான் இலங்கை ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நன்றாக பேட்டிங்கை தொடங்கினார். 2 பவுண்டரிகளுடன் நன்றாக தொடங்கிய அவரை 15 ரன்களில் பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அகமது க்ளீன் போல்டு ஆக்கினார். விக்கெட் எடுத்த பிறகு ஹசரங்காவை அப்ரார் அகமது கேலி செய்யும் விதமாக சைகை காட்டி ஸ்லெட்ஜ் செய்தார். இதோடு கதை முடியவில்லை.
பாகிஸ்தான் பேட் செய்ய வந்தபோது பந்துவீசும்போது ஹசரங்கா பழிவாங்கினார். பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமானை ஒரு கையால் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த ஹசரங்கா, பின்னர் சைம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் அலி அகா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 3 விக்கெட்களின்போதும் வித்தியாசமான கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி ஸ்லெட்ஜ் செய்த அப்ரார் அகமதுவுக்கு பதிலடி கொடுத்தார்.
இதனால் போட்டி சுவாரஸ்யமாக சென்றது. 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றாலும், ஹசரங்காவின் தரமான சம்பவம் இது என நெட்டிசன்கள் அவரின் பதிலடி கொண்டாட்டத்தை வைரலாக்கி வருகின்றனர். ஆனால் போட்டியின் முடிவில் அப்ரார் அகமது மற்றும் ஹஸரங்கா ஒருவரை ஒருவர் நட்பு பாராட்டி பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

