Last Updated:
“எந்தச் சட்டம் பெற்றோரை தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கிறது? என் குழந்தைகள் அங்கே அழுகிறார்கள்” வாகா எல்லையில் கதறி அழும் தாய்.
பாகிஸ்தான் தனது எல்லையை முழுவதுமாக மூடிவிட்டதால், பாகிஸ்தான் தனது குடிமக்களை அட்டாரி-வாகா கடவையில் சிக்கித் தவிக்க விட்டுள்ளது.
காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் உள்ளூர் குதிரையோட்டி ஒருவர் உட்பட 27 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் ராஜாங்க ரீதியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் ஒன்றாக இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் நமது நாட்டைவிட்டு, ஏப்ரல் 30ஆம் தேதியோடு வெளியேற வேண்டும் என்றும், அதன் பின் எல்லைப்பகுதியான வாகா – அட்டாரி கேட் மூடப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் நாட்டினர் முறையான ஆவணங்களுடன் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை கடக்கும் இடத்தை பாகிஸ்தான் அரசு இன்று முற்றிலுமாக மூடியுள்ளது.
எல்லை மூடப்பட்டதால், வியாழக்கிழமை இரு நாடுகளிலிருந்தும் யாரும் மறுபுறம் கடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்ல காத்திருக்கும் இரு சகோதரிகளின் கதை கண்ணீர் வரவழைக்கிறது. இந்திய சகோதரிகள் இருவர் பாகிஸ்தானில் உள்ளவர்களை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் அரசு அறிவிப்பைத் தொடர்ந்து எல்லையை கடக்க வாகா எல்லைக்கு சென்றுள்ளனர். ஆனால், பாகிஸ்தான் தனது எல்லையை மூடியதால் அவர்களால் பாகிஸ்தான் நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, எல்லை பகுதியிலேயே காத்திருக்கின்றனர்.
அந்த இரு சகோதரிகளில் ஒருவர், “நான் என் குழந்தையிடம் செல்ல வேண்டும். யாராவது தயவுசெய்து என்னை எல்லையைக் கடக்க உதவி செய்யுங்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தைகளை எங்களிடம் இருந்து பிரிக்கிறவர்கள், அவர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” கண்ணீரோடு தெரிவித்தார்.
மற்றோரு பெண், “எந்தச் சட்டம் பெற்றோரை தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கிறது? என் குழந்தைகள் அங்கே அழுகிறார்கள், நான் அங்கு செல்ல வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.
காலையிலிருந்து எல்லையைக் கடக்கத் தயாராக இருந்த அந்த பாகிஸ்தானியர்கள், தங்கள் சொந்த நாடு தங்கள் மண்ணுக்குள் மீண்டும் நுழைய அனுமதிக்க மறுத்ததால் சிக்கித் தவித்து, மனம் உடைந்தனர்.


