உடல்பருமனின் அவமானங்கள்…
ஆரம்ப கட்டத்தில் பருமனான உடல் எடையைக் குறித்து பல விமர்சனங்கள் ஓப்ராவிற்கு வந்துள்ளன. பல செய்திகளின் தலைப்புகளில் அவரின் தோற்றத்தைப் புண்படுத்தும் வகையிலும் ஆரோக்கியத்தைக் குறித்தும், ”ஓப்ரா: ஃபேட்டர் தான் எவர்’ (Oprah: Fatter than Ever) , ”ஓப்ரா வார்ன்ட் ‘டயட் ஆர் டை” (Oprah Warned ‘Diet or Die) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதன்பின் தனது உடல் எடையைக் குறைக்க மருந்துகளை எடுத்துக் கொண்டார். அதோடு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “உலகம் எனக்குக் கொடுத்த அவமானத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். 25 ஆண்டுகளாக, என் எடையைக் கேலி செய்வது தேசிய விளையாட்டாக இருந்தது.
1990-ல் ஒரு டிவி கையேட்டின் அட்டைப்படத்தில், `bumpy, lumpy, and downright dumpy’ என்று குறிப்பிடப்பட்டேன். எல்லா அவமானங்களையும் எதிர்த்துப் போராடும் முயற்சியில், நான் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் பட்டினி கிடந்தேன்’’ என்றார்.
எடை குறைக்கும் மருந்துகள்…
மருந்துகள் மூலமாக தனது உடல் எடையைக் குறைத்ததாகக் கூறுபவர் அம்மருந்துகளைப் பாராட்டினார்.
மேலும், “அதிக எடை அல்லது உடல் பருமனால் பல ஆண்டுகளாகப் போராடும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் மருத்துவத்தை பற்றி பேசுவோம் என்று எனது வாழ்நாளில் நான் கனவிலும் நினைக்கவில்லை.
மற்றவர்கள் அதிக எடையுடன் இருப்பதற்காக அல்லது அவர்கள் எடையைக் குறைக்க அல்லது குறைக்காமல் இருப்பதற்காக அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக நம்மை நாமே அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்!