Last Updated:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதி செய்கிறது. அமீரகத்தின் இந்த முடிவால் இந்தியாவுக்கு சில பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) எரிபொருள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான OPEC-லிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மே 1 முதல் அமலுக்கு வரும் இந்த முடிவினால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் தாக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலால் மத்திய கிழக்கில் எரிபொருள் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களால் அமீரகத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு வயல்கள் சேதமடைந்தன.
மேலும், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், தனது ஏற்றுமதியைத் தடையின்றி மேற்கொள்ளவும், உற்பத்தி அளவை தன் விருப்பப்படி அதிகரித்துக்கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகம் ஓபெக் அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதி செய்கிறது. அமீரகத்தின் இந்த முடிவால் இந்தியாவுக்கு சில பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
OPEC கூட்டமைப்பின் கட்டுப்பாடுகள் இல்லாததால், அமீரகம் அதிக அளவில் எண்ணெயை உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வரும். இது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உதவும், அதன் பலனாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டாலும், அமீரகம் தனது குழாய்கள் வழியாக ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்திற்கு எண்ணெயைக் கொண்டு வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப முடியும். இது போக்குவரத்துச் சிக்கல்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தனிப்பட்ட விற்பனையாளராக அமீரகத்துடன் இந்தியா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, குறைந்த விலையிலும் சாதகமான நிபந்தனைகளிலும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வழிவகை செய்யும்.


