கோலாலம்பூர்:
மலேசியா முழுவதும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மையங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ‘ஆப் தாது மெகா’ (Op Dadu Mega) அதிரடி சோதனையில், 38 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 20 முதல் டிசம்பர் 23 வரை நடைபெற்ற இந்தச் சோதனையை, கூட்டரசு குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சூதாட்டம் மற்றும் ரகசிய சங்கங்கள் தடுப்புப் பிரிவு (D7) மற்றும் மாநில CID குழுக்கள் இணைந்து நடத்தின.
மொத்தம் 21 இடங்கள் சோதனையிடப்பட்டன என்று, குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் கூறினார்.
இதில் 20 இடங்கள் சூதாட்ட இணையதளங்களை விளம்பரப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் ‘கால் சென்டர்களாக’ (Call Centres) செயல்பட்டு வந்தன. இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தைக் கூறி மக்களை ஏமாற்றும் (Scam) மோசடி மையமாக அது செயல்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட 85 நபர்களில் 62 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் அடங்குவர். இதில் 47 பேர் மலேசியர்கள், 38 பேர் வெளிநாட்டினர். இவர்கள் அனைவரும் இந்த மையங்களில் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகளாகவும், ஆப்பரேட்டர்களாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்தச் சோதனையின் போது கணினிகள், டேப்லெட்டுகள், கைபேசிகள் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மையங்கள் மலேசியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களையும் இலக்கு வைத்துச் செயல்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொதுச் சூதாட்ட விடுதிகள் சட்டம் 1953: சூதாட்டத்தை நிர்வகித்தல் மற்றும் விளம்பரப்படுத்துதல் தொடர்பான பிரிவுகள், தண்டனைச் சட்டம் பிரிவு 420: ஏமாற்றுதல் மற்றும் மோசடி, குடிநுழைவுச் சட்டம்: முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருத்தல் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் 117 ‘கால் சென்டர்கள்’ கண்டறியப்பட்டு, மொத்தம் 713 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த டத்தோ எம். குமார், சட்டவிரோத சூதாட்டத்தை ஒழிக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும், பொதுமக்கள் இது குறித்த தகவல்களைத் தந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




