சைபர்ஜெயா:
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC), நேற்று ஜனவரி 1ஆம் தேதி 2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (ONSA) அமல்படுத்தப்பட்டதை அறிவித்தது. இந்தச் சட்டம், இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சட்டபூர்வ கட்டமைப்பை வகுத்துள்ளதுடன் குறிப்பாக குழந்தைகள், குடும்பங்கள் உள்ளிட்ட பயனர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.


ONSA, இணையத்தில் ஏற்படும் தீங்குகளைக் கையாள்வதற்காக உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு தெளிவான பொறுப்புகள், கடமைகளை நிர்ணயிக்கிறது. இதில், அபாய நிலைக்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள், பயனர் புகார் அளித்தல், உதவிக்கான நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.
ONSA, 1998 தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் (CMA 1998)இன் கீழ் பயன்பாடுகள் சேவை வழங்குநர் (ASP), உள்ளடக்க பயன்பாடுகள் சேவை வழங்குநர் (CASP) அல்லது பிணைய சேவை வழங்குநர் (NSP) உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும்.
ONSA தனிப்பட்ட பயனர்களுக்குப் பொருந்துவதில்லை. மேலும், 1998 CMA பிரிவு 46A இன் கீழ் உள்ள ‘deeming’விதிமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக MCMC தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உரிமத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து சமூக ஊடகத் தளங்களும் தற்போதுள்ள உரிமக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படுவதுடன், ONSA உட்பட மலேசிய சட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


மொத்தத்தில், இந்நடவடிக்கைகள் அனைத்தும், மலேசியாவில் செயல்படும் பெரும் அளவிலான இணைய தளங்கள் உரிய மேற்பார்வை, பொறுப்புணர்வுக்குள் இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், கட்டமைக்கப்பட்ட, கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் ஒழுங்குமுறை அணுகுமுறையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன.
மலேசியாவின் இணையச் சூழல் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், MCMC, சேவை வழங்குநர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பரந்த சமூகக் குழுக்களுடன் இணைந்து, அனைத்து பயனர்களுக்கும் குறிப்பாக குழந்தைகள், குடும்பங்களுக்காக, மேலும் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க உறுதியாக செயல்படுவதைத் தொடரும்.




