NPS திட்ட ஊழியர்களுக்கு 2 புதிய ஆப்ஷன்கள்! நிதி அமைச்சகத்தின் அதிரடி அறிவிப்பு!
மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்பிஎஸ் திட்டத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் அரசு ஊழியர்கள் மட்டுமே முதலீடு செய்த என்பிஎஸ் திட்டத்தில், இனி மத்திய அரசு தன்னாட்சி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களும் பங்குபெறலாம்.
ஐஐடி, என்ஐடி, எய்ம்ஸ் மற்றும் பிற மத்திய பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஊழியர்கள் இனி தங்களுடைய வயது மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அதிக லாபம் தரக்கூடிய என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத்துறை வெளியிட்டுள்ளது. அந்த இரண்டு என்பிஎஸ் திட்டங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எல்சி 75 ஹை (LC-75 High): இந்த திட்டத்தில் பங்குபெறும் தன்னாட்சி நிறுவன ஊழியர்களின் 75 சதவீத முதலீடு பங்குச்சந்தையில் போடப்படும். எனவே ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் பெற நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

அக்ரசீவ் லைஃப் சைக்கிள் ஃபண்ட்: இந்த ஃபண்ட் இதற்கு முன்னர் பேலன்ஸ்டு லைஃப் சைக்கிள் ஃபண்ட் (BLC) என்று அழைக்கப்பட்டது. இந்த முதலீட்டு திட்டத்தில் பங்கு பெறுபவர்களின் பணத்தில் சுமார் 50 சதவீதம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும். முதலீடு செய்பவருக்கு 45 வயது பூர்த்தியானதும் பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடு படிப்படியாகக் குறைக்கப்படும். அதாவது ஓய்வு காலம் நெருங்கும் போது பணத்திற்கு எந்த ஆபத்து ஏற்படக் கூடாது என்று நினைப்பவர்கள், ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
ஏற்கனவே இருக்கும் என்பிஎஸ் திட்டங்களுக்கு கூடுதலாக தற்போது இந்த இரண்டு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனி விருப்பம் இருக்கும். சிலர் ரிஸ்க் எடுக்க விரும்புபவராக இருப்பார்கள். சிலருக்கு அதிக ரிஸ்க் எடுத்து லாபம் சம்பாதிக்க ஆசை இருக்காது. எனவே ஒவ்வொரு ஊழியரின் இந்த மாறுபட்ட விருப்பத்திற்கு ஏற்ப அரசு இந்த 2 திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த 2 திட்டங்களில் எது ஏற்றதோ அதை ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். NPS திட்டத்தின் நம்பகத்தன்மையை இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது, மத்திய அரசு ஊழியர்களைப் போலவே பிற நிறுவன ஊழியர்களுக்கும் தங்கள் ஓய்வூதியத்தை சிறப்பாக திட்டமிடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி பெரும் ஊழியர்கள் என்.பி.எஸ் விதிமுறைகளைப் பின்பற்றி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக தங்களுக்கு பிடித்த முதலீட்டு திட்டத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்யலாம்.

