சிவப்பு என்பது வறுமையின் நிறம், கம்யூனிசத்தின் நிறம் என்று சொல்லப்படுவதுண்டு. இன்னொரு பக்கம், இது அழகுசார்ந்து ஈர்க்கும் நிறமாகவும் உள்ளது. இந்நிலையில், வட கொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன்? வட கொரியா சொல்லும் காரணம் இதுதான். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கானது முதலாளித்துவத்தின் (Capitalism) அடையாளமாவும், மேற்கத்திய நாடுகளின் ஆளுமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால் தடை விதிக்கப் பட்டுள்ளதாக அந்நாடு கூறுகிறது.
ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய நாடுகள் அங்கிருந்து சென்றாலும், அவர்களின் கலாசாரம் மற்றும் சிந்தனைகளை விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படித்தான், மேற்கத்திய கலாசாரம் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கத் தொடங்கின.
உண்மையில், அதிக மேக்கப் செய்வது மேற்கத்திய கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, வட கொரியாவில் அதிக மேக்கப் செய்துகொள்வது வெறுக்கப்படுகிறது. சட்டத்தின்படி, பெண்கள் அங்கு குறைந்த மேக்கப் மட்டுமே செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், `சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடும் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாகக் காட்டலாம், அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்ப்பதாகக் கருதப்படலாம்’ என்று கூறி சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளது வட கொரியா.

